நடிகை பேட்டி, கமல் மௌனம்
ஓவராக பேசுவதை விட பெரிய பப்ளிசிடி இருக்க முடியாது. இதை நிரூபித்தவர்கள் சேரன், மிஷ்கின், சிம்பு, ஜெய் போன்றவர்கள். அந்த வரிசையில் நடிகை ஒருவரும் சேர்ந்திருக்கிறார். அதுவும் நடிக்க வந்து இன்னும் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகாத நிலையில்.
பழம்பெரும் நடிகை சுமித்ராவின் மகள் நட்சத்திராதான் அந்த நடிகை. இவர் டூ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். சமீபத்தில் வெளிவந்த பேட்டியன்றில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்தவர், கமல்ஹாசனை பிடிக்கும். அதுவும் எந்தளவுக்கு என்றால், அவரை கல்யாணம் செய்து கொள்கிற அளவுக்கு என்று கூறியிருக்கிறார். முன்னணி பத்திரிகைகளை ஒரு வரி விடாமல் படித்துவிடும் கமல் இந்த பேட்டியை படித்துவிட்டு ஒரு பதிலும் சொல்லாமல் அமைதியாகிவிட்டார். ஐயோ பாவம்.
அனுஷ்காவின் சமையல்
நவநாகரிக பெண்களிடம் சமைக்க தெரியுமா என்று கேட்டால் அந்த கேள்வியையே தரக்குறைவாக நினைக்கிற வழக்கம் பெருகி வருகிறது. ஆனால் நடிகை அனுஷ்கா பிரமாதமாக சமைப்பாராம். பெங்களுரில் இவரது அம்மா ஒரு ரெஸ்ட்ராரெண்ட் வைத்திருக்கிறார்.
தனக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் இங்கு செல்லும் அனுஷ்கா திடீர் சமையல்காரர் ஆகிவிடுகிறாராம். தன் கையால் நான் வெஜ் ஐட்டங்களை சமைத்து வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுகிறாராம்.
இந்த ஒரு காரணத்திற்காகவே அவரது ரெஸ்ட்ராரென்ட்டில் கூட்டம் அலை மோதுகிறதாம். இந்த ரெஸ்ட்ராரென்ட் புரட்சியை பெங்களுரை தொடர்ந்து சென்னையிலும் அரங்கேற்ற திட்டமிட்டிருக்கிறாராம் அனுஷ்கா.
ரஜினி வேண்டாம் -சிரஞ்சீவி
மஹதீரா படத்தைதான் மாவீரன் என்ற பெயரில் தமிழில் டப்பிங் செய்கிறார்கள். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு ரஜினியை வந்து கலந்து கொள்ளும்படி அழைத்திருந்தார் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி.
சென்னையில் இருப்பதால் வருவதாக ஒப்புக் கொண்டார் ரஜினியும். ஆனால் திடீரென்று தனக்கு மூட் அவுட்டாக இருப்பதால் வர இயலாது என்று கூறிவிட்டாராம் ரஜினி. இந்த தகவலை கேள்விப்பட்ட சிரஞ்சீவி பலத்த அதிர்ச்சியடைந்திருக்கிறார். சட்டென்று சென்னையிலிருக்கிற முக்கியஸ்தர்களுக்கு போன் அடித்தவர், மீண்டும் ரஜினியிடம் போய் நிக்காதீங்க. கமல் அப்பாயின்ட்மென்ட் கிடைக்குதா பாருங்க என்றாராம்.
இந்த அழைப்புக்காகவே காத்திருந்த மாதிரி கமலும் சம்மதித்திருக்கிறார். நெருங்கிய நண்பர்களாக இருந்த சிரஞ்சீவியும் ரஜினியும் இந்த விஷயத்திற்கு பிறகு விலகி நிற்பதாக கிசுகிசு கிளம்பியிருக்கிறது.
இளையராஜாவின் கோபம்
வராத மகராசன் வந்திருக்காரேன்னு சந்தோஷப்பட்டால், இப்படியாகிருச்சே என்று சிலர் கவலைப்படும்படி ஆனது ஒரு திரைப்பட விழா. செங்காத்து பூமியிலே என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தார் இளையராஜா. அதிக நேரம் பேச வேண்டும் என்று நினைத்து வந்திருப்பார் போலிருக்கிறது.
ஆனால் தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி சுமார் முக்கால் மணி நேரம் பேசி தள்ள, பொறுமையிழந்தது கூட்டம். இந்த படத்தில் நடித்திருக்கிறாராம் இவர். தனக்கு பத்மஸ்ரீ விருதே கூட கிடைக்கலாம் என்ற ரேஞ்சில் பேசிக் கொண்டு போன அழகன் தமிழ் மணி, இளையராஜாவை பற்றியும் பேசினார். அங்குதான் வினையே ஆரம்பம் ஆனது. மலையூர் மம்பட்டியான் படத்தின் தயாரிப்பாளர்களில் தானும் ஒருவர் என்று குறிப்பிட்ட தமிழ்மணி, இளையராஜா இசையமைத்து கொடுத்ததால்தான் படம் பெரிய வெற்றி பெற்றது என்றார். விழா முடிந்து கிளம்புகிற நேரம், மைக் ஆன் பண்ணியிருப்பது தெரியாமலே நான் நிறைய பேசணும்னு நினைச்சேன்.
நீங்களே அதிக நேரம் பேசி கெடுத்திட்டீங்க என்று தமிழ்மணியை குறை கூறினார் இளையராஜா. அப்படியே நடிகர் தியாகராஜன் பக்கம் திரும்பி, இவரு நான்தான் மலையூர் மம்பட்டியான் படத்தின் தயாரிப்பாளர்னு சொல்றாரு.அதையும் கேட்டுகிட்டு சும்மாயிருக்கீங்களே என்று எகிற, எப்படியோ சமாதானப்படுத்தி அழைத்து சென்றார்கள் இளையராஜாவை.
அஜீத் ரசிகர்களின் கவலை
மங்காத்தா படத்தில் அஜீத் வில்லனாக நடிக்கிறார் என்பதை நேரடியாகவே ஒரு பேட்டியில் கூறிவிட்டார் வெங்கட்பிரபு. இதனால் பேரதிர்ச்சியில் இருக்கிறார்கள் அஜீத்தின் ரசிகர்கள். பொதுவாக ஆன்ட்டி ரோலில் நடிக்கும் ஹீரோக்கள், இரண்டு வேடத்தில் நடிப்பார்கள்.
ஒன்று நல்லவராகவும், மற்றொன்று கெட்டவராகவும் இருக்கும். ஆனால் அஜீத்தை பொறுத்தவரை அந்த இன்னொரு கேரக்டரை நாகார்ஜுனா செய்யட்டும் என்றாராம். அப்புறம் என்ன காரணத்தாலோ நாகார்ஜுனா விலகிக் கொள்ள, அர்ஜுன் நடித்து வருகிறார். இவருக்கு படத்தில் சின்ன ரோல்தான் என்று வெங்கட் பிரபு சப்பை கட்டு கட்டினாலும், அஜீத் வருகிற அளவுக்கு அர்ஜுனும் வருவாராம்.
இப்படியெல்லாம் ரிஸ்க் எடுக்கணுமா என்று கேள்வி கேட்டு ஏராளமான கடிதங்கள் வருகிறதாம் அஜீத் ஆபிசுக்கு. ஆனால் அதையெல்லாம் அவர் படிக்கிறாரா என்பதுதான் கேள்வி.