விஜய் பிறந்த நாளில் வேலாயுதம்
ஜுன் 22 ந் தேதி வேலாயுதம் படத்தை வெளியிட்டு விட வேண்டும் என்று வேக வேகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன். அன்றுதான் விஜய்யின் பிறந்த நாள்.
அதனால்தான் இத்தனை வேகம் காட்டப்படுகிறது என்று கூறப்பட்டாலும் உண்மை அதுவல்லவாம். விஜய் பிறந்த நாளாக இருந்தால் அன்று மட்டும் டிக்கெட் விலையை ஐந்து மடங்காகவா உயர்த்தி வாங்க போகிறார்கள் ரசிகர்கள்? எனவே ஆஸ்கர் ரவியின் வேகம் வட்டிக்கணக்கு பார்ப்பதால்தானாம்.
இந்த படத்தை எவ்வளவு விரைவாக முடிக்கிறாரோ, அவ்வளவு வட்டி குறையும் என்பது அடிப்படையில் பைனான்சியரான அவர் கணக்கு. தனது படத்தில் நடித்து முடித்துவிட்டு நண்பன் படத்தை ஒப்புக் கொண்டிருக்கலாம். அப்படி ஒப்புக் கொண்டாலும் தவறில்லை. அவ்வப்போது வேலாயுதம் படப்பிடிப்பை விட்டு விட்டு நண்பன் படத்தில் நடிக்க போய் விடுகிறாரே என்றும் கவலைப்படுகிறாராம்.
இவர் நினைத்த மாதிரியே வேலாயுதம் பட பாடல் காட்சி ஒன்றில் நடித்துவிட்டு அந்தமானுக்கு பறந்து விட்டார் விஜய். இந்த வேகம் நண்பன் படத்திற்காக. பிறகு ஏன் வருத்தம் வராது ரவிக்கு?
மங்காத்தாவில் இலங்கை?
இலங்கைக்கு எந்த நடிகை சென்று வந்தாலும் அவர்களை உண்டு இல்லை என்று ஆக்க தயாராக இருக்கிறார்கள் இங்கிருக்கும் அரசியல்வாதிகள். அசின் முதலில் மாட்டினார். பிறகு ஸ்ரேயா சிக்கினார்.
இலங்கை அழகான நாடு என்று சொன்ன ஒரே காரணத்திற்காக அவரது படங்களை வெளியிட விட மாட்டோம் என்று கொக்கரித்தது ஒரு அரசியல் கட்சி. நிலைமை இப்படியிருக்க, இலங்கையிலிருந்தே ஒரு நடிகையை வரவழைத்து தனது மங்காத்தா படத்தில் அயிட்டம் டான்ஸ் ஒன்றை ஆட வைக்கலாமா என்ற எண்ணத்திலிருக்கிறாராம் வெங்கட்பிரபு.
விஷயம் தெரிந்த பின் பதறிப் போனவர் அஜீத்துதான். நான் நடிக்கிற படத்தில் இப்படி தன்னிச்சையாக ஏதாவது முடிவெடுக்காதீர்கள். பிரச்சனை உங்களுக்கு மட்டுமல்ல, எனக்கும்தான் என்றாராம். ஏற்கனவே கங்கை அமரன் இலங்கைக்கு போய் ராஜபக்சேவை சந்தித்தார் என்றொரு குற்றச்சாட்டு நிலவியது. இப்போது அதை இன்னும் உறுதி படுத்துவார் போலிருக்கிறது வெங்கட்பிரபு.
நகுலிடம் கோபித்த நடிகை
நகுல் நடிக்கும் புதிய படத்தை சச்சின் பட இயக்குனர் ஜான் மகேந்திரன் இயக்கி வருகிறார். படம் தொடங்கி சில நாட்களிலேயே அப்படத்தின் பெங்களுர் ஹீரோயின் கோபித்துக் கொண்டு கிளம்பிவிட்டார். காரணம் நகுலின் ஓவர் பேச்சுதானாம்.
படப்பிடிப்பில் கிண்டல் செய்கிறேன் பேர்வழி என்று எல்லை தாண்டி பேச ஆரம்பித்தாராம். இதில் எரிச்சலான நடிகை எங்கிட்ட இந்த வேலையெல்லாம் வேணாம் என்று சொல்லாமல் கொள்ளாமல் பிளைட் ஏறிவிட்டார்.
வேறு வழியில்லாமல் ரம்யா நம்பீசனை நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர். இவரிடமாவது கொஞ்சம் அடக்கமாக இருங்க. இதுவும் பிரச்சனைன்னா நான் ஒன்றுமே செய்ய முடியாது என்று நகுலிடம் கூறினாராம். இப்போது செட்டுக்கு வந்தால் நகுல் அமைதியாக இருக்கிறாராம்.
பிரசாந்த்தின் கருத்துக்கணிப்பு
அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள நடிகர் பிரசாந்த் வந்திருந்தார். தேர்தல் நேரத்தில் திமுக வேட்பாளருக்கு அவர் வாக்கு கேட்டு வலம் வந்ததை அப்போது நினைவுபடுத்திய நிருபர்கள், பேசாம கட்சியில் சேர்ந்திட வேண்டியதுதானே என்றார்கள்.
அதற்கு பதிலேதும் சொல்லாத பிரசாந்த், தேர்தல் முடிவு எப்படியிருக்கும்னு நினைக்கிறீங்க என்று எதிர் கேள்வி போட்டார் நிருபர்களிடம். கருத்துக்கணிப்பு சொல்றபடி பார்த்தா… என்று இழுத்த நிருபர்களிடம், என்னங்க பெரிய கருத்துக்கணிப்பு. இப்போ பாருங்க.
இங்கேயே நான் கருத்துக்கணிப்பு நடத்துறேன் என்றார். பின்பு அங்கு கூடி நின்ற நிருபர்கள் சுமார் இருபது பேரிடம், அய்யாவுக்கு கைய து£க்குறவங்க து£க்குங்க என்றார். அப்புறம் அம்மாவுக்கு என்றார். கிடைத்த ரிசல்ட் அவர் நினைத்தபடி இல்லாமல் போனதால் சற்றே அப்செட் ஆன பிரசாந்த், நான் வரலைப்பா இந்த ஆட்டத்துக்கு என்று எடுத்தார் ஓட்டம். ச்சும்மா ஜாலிக்காம்…
வடிவேலுவின் கடும் முயற்சி
பிரபுதேவா இயக்கும் படங்களில் எல்லாம் தொடர்ந்து நடித்து வந்த வடிவேலு, இப்போது அவரால் புறக்கணிக்கப்படுவதை கண்டு ஆடிப் போயிருக்கிறார். சரி, ஒருவர்தானே. போகட்டும் என்று இருந்தவருக்கு ரஜினியின் ரானா படத்திலிருந்தும் கல்தா கொடுத்துவிட்டார்கள் அல்லவா? இப்படியே போனால் நமது நிலைமை மோசமாகிவிடும் என்று நினைக்கிறாராம்.
முன்பெல்லாம் பட டீலிங்கை மேனேஜர் மூலம் பேசிவரும் அவர், இப்போது யாராவது போன் செய்தால் தன்னிடம் லைனை தரும்படி உத்தரவிட்டிருக்கிறாராம் மேனேஜருக்கு. செல்லம், அண்ணே என்று அவரவர் தகுதிக்கேற்ப அன்பு செலுத்தும் வடிவேலு, இழந்த நட்புகளை மீண்டும் புதுப்பிக்கும் வேலையிலும் இறங்கியிருக்கிறாராம்.
ஆனால் அவரது கண்கள் சின்ன சின்ன தயாரிப்பு நிறுவனங்களை விடவும், பெரிய ஹீரோக்கள் படங்களில் கமிட் ஆவதுதான் முக்கியம் என்று தேடிக் கொண்டிருக்கிறதாம். இப்படி ஒரு படத்தில் நடித்தால் போதும்.
தன் மீது திணிக்கப்படும் மறைமுக தடைகள் எல்லாம் சுக்கு நு£றாகிவிடும் என்பது அவரது நம்பிக்கை. ஆனால் ஒருவரும் அதற்கு முன்வரவில்லை என்பதுதான் சோகம்.
விடுபட்டார் தமன்னா
ஒரு தொல்லையில் இருந்து விடுபட்டிருக்கிறார் தமன்னா. நடிகர் கார்த்தியும் தமன்னாவும் காதலிக்கிறார்கள். அண்ணன் சூர்யாவை போல கார்த்தியும் ஒரு நடிகையைதான் திருமணம் செய்வார் என்றெல்லாம் யூகத்தை கிளப்பின பத்திரிகைகள்.
அதற்கேற்றார் போல தமன்னாவை எந்த சந்தர்பம் கிடைத்தாலும் வர்ணிக்காமல் விட மாட்டார் கார்த்தி. இப்படியெல்லாம் மக்களையும் ரசிகர்களையும் ஏமாற்றி வந்த இந்த நிழல் காதல், நிழலாகவே போய் விட்டது. இனிமேல் இப்படி ஒரு செய்தியை எழுத மாட்டார்கள் அல்லவா? ஆனால் சும்மாயில்லாத சில நிருபர்கள் கார்த்தி திருமண அறிவிப்பு வெளியில் வந்த கையோடு தமன்னாவை தொடர்பு கொள்ள முயற்சித்தார்கள்.
வேறென்ன? அவரிடமிருந்து கருத்துக்களை வாங்கி வெளியிடதான் இந்த முயற்சி. நல்ல காரியம் நடக்கும் போது எதையாவது சொல்லி, அவர்கள் இதை திரித்து எழுதி… போனையை எடுக்கவில்லையாம் தமன்னா.
சவுத்ரியின் தெலுங்கு ஆர்வம்
தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி தெலுங்கிலும் படங்கள் தயாரித்து வெளியிடுகிறார். அதுமட்டுமல்ல, அங்கு தயாராகும் பிற கம்பெனி படங்களையும் விநியோகம் செய்து வருகிறார். இது இப்போது மிகவும் வசதியாக போயிருக்கிறது அவருக்கு.
தன் மகன் ஜீவா நடித்த கோ படத்தை ரங்கம் என்ற பெயரில் வெளியிடப் போகிறாராம். தமிழ் ஹீரோக்கள் அத்தனை பேருக்கும் தெலுங்கு இன்டஸ்ட்ரியிலும் பெயரெடுக்க வேண்டும் என்ற ஆசை தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது.
விஷால், ஆர்யா, சூர்யா, கார்த்தி என்று ஏற்கனவே அங்கு வெற்றிக் கொடி நாட்டி வரும் நடிகர்களில் ஜீவாவும் இப்படத்தின் மூலம் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கிறார்கள். இங்குள்ள ஹீரோக்களுக்கு இருக்கிற அதே ஆசை தெலுங்கு ஹீரோக்களுக்கும் வந்திருக்கிறது.
ராணா, மகேஷ்பாபு, நாகார்ஜுனா, ராம்சரண் தேஜ் ஆகியோரின் படங்களும் இங்கு ரிலீஸ் ஆவதன் மர்மம் இதுதான். பரஸ்பர வெற்றி நல்ல விஷயம்தானே?